கூடலூரில் காட்டுயானைகள் அட்டகாசம் - தப்பி ஓடிய 2 பேர் கீழே விழுந்து படுகாயம்
கூடலூரில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அப்போது தப்பி ஓடிய 2 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூர் நகராட்சியில் முதுமலை புலிகள் காப்பக எல்லையோரத்தில் தொரப்பள்ளி, அள்ளூர்வயல், குனில்வயல், இருவயல், ஏச்சம்வயல், புத்தூர்வயல், வடவயல் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. முதுமலை வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் அடிக்கடி மேற்கண்ட கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. மேலும் அவ்வப்போது பொதுமக்களை தாக்குகின்றன. எனவே காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கோரி சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 கும்கி யானைகளை வரவழைத்து, தொரப்பள்ளி பகுதியில் முதுமலை வனத்துறையினர் முகாமிட்டு காட்டுயானைகள் ஊருக் குள் நுழையாமல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தவிர 6 குழுக்களாக பிரிந்து இரவு, பகலாக தீ மூட்டி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் முதுமலை எல்லையோரம் உள்ள அகழியை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனாலும் காட்டுயானைகள் வழக்கம்போல் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைய முயன்று வருகின்றன. அப்போது வனத்துறையினரும் காட்டுயானைகளை விரட்டியடித்து வருகின்றனர். ஊருக்குள் நுழைவதில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதை உணர்ந்த காட்டுயானைகள், வழக்கமாக பயன்படுத்தும்பாதை களை விட்டு தற்போது வேறுவழி களில் வர தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காட்டுயானை ஒன்று தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்தது. பின்னர் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த தள்ளுவண்டி கடையை சாய்த்து போட்டது. இதில் தள்ளுவண்டி கடை சேதம் அடைந்தது. காட்டுயானை வருவதை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்குள் காட்டுயானை ஓடியது.
இதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு மற்றொரு காட்டுயானை கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பிளிறியவாறு ஓடியது.
மேலும் எதிரே நடந்து வந்த பொதுமக்களை தாக்க முயன்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்து அலறியடித்து வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். அப்போது குனில்வயலை சேர்ந்த முகமது, மேரி ஆகியோர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்கிருந்து அழைத்து தப்பி சென்றனர். பின்னர் காட்டுயானை அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த நவாஸ் என்பவரது ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் வனப்பகுதிக்குள் ஓடியது.
ஊருக்குள் நுழைந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், முதுமலை வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது, அந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story