விளைநிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 168 விவசாயிகள் கைது குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றியதால் பரபரப்பு


விளைநிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 168 விவசாயிகள் கைது குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2019 3:30 AM IST (Updated: 19 July 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 168 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை உள்பட 13 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மூலக்கரை, பெருந்துறை, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

எனினும் போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில இடங்களில் போலீசார் மற்றும் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், உயர் மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களுக்கு முறையாக இழப்பீடு, வாடகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனுமதியின்றி போலீஸ் துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டி அத்துமீறி செய்யும் பணியை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 18-ந்தேதி(நேற்று) காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்து இருந்தனர். ஆனால் விவசாய கூட்டு இயக்கம் சார்பில், ஈரோடு சம்பத் நகரில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் செல்ல முடியாத வகையில் தடுப்பு கம்பிகள் வைத்தனர். மேலும் அதிவிரைவு படை போலீசாரும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 8 மணி முதல் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற ஒவ்வொருவரையும் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வரக்கூடும் என்பதால் முக்கிய சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். குறிப்பாக ஈரோடு சோலார், திண்டல், ரங்கம்பாளையம், கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடியில் விவசாயிகள் வருவதை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட விவசாயிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். மேலும் ஈரோடு சம்பத்நகரில் தரையில் அமர்ந்து போராடிய விவசாயிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

ஈரோடு மாநகர் பகுதியில் 7 பெண்கள் உள்பட மொத்தம் 168 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் ஈரோடு மாநகர் முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Next Story