எங்களுடன் வந்துவிடுங்கள் என ஸ்ரீராமுலுவுக்கு குமாரசாமி அழைப்பு டி.கே.சிவக்குமாரும் சந்தித்து பேசியதால் பரபரப்பு


எங்களுடன் வந்துவிடுங்கள் என ஸ்ரீராமுலுவுக்கு குமாரசாமி அழைப்பு டி.கே.சிவக்குமாரும் சந்தித்து பேசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 July 2019 4:56 AM IST (Updated: 19 July 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

எங்களுடன் வந்து விடுங்கள் என்று ஸ்ரீராமுலுவை முதல்-மந்திரி குமாரசாமி அழைப்பு விடுத்தார். பின்னர் டி.கே.சிவக்குமாரும் ஸ்ரீராமுலுவை சந்தித்து பேசினார். சட்டசபையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், மதியம் 1 மணியளவில் உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்காக ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுவிட்டனர். அப்போது முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் சில கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ., மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். இதை பார்த்த முதல்-மந்திரி குமாரசாமி, ஸ்ரீராமுலுவை பார்த்து ஏன் தனியாக இருந்து சிந்திக்கிறீர்கள், எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

அப்போது ஸ்ரீராமுலுவை பார்த்து, துணை முதல்-மந்திரி பதவி உங்களுக்கு கிடைக்காது, ரமேஷ் ஜார்கிகோளிக்கு தான் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். அதாவது பா.ஜனதா ஆட்சி அமைந்தால், ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பில்லை, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிகோளிக்கு தான் அந்த பதவி கிடைக்கும் என்று மந்திரி டி.கே.சிவக் குமார் கிண்டலாக கூறி இருந்தார்.

உடனே ஸ்ரீராமுலு சிரித்தபடியே துணை முதல்-மந்திரி பதவி அல்ல, முதல்-மந்திரி பதவி கொடுத்தாலும் உங்களுடன் வரமாட்டேன் என்று குமாரசாமி மற்றும் டி.கே.சிவக்குமாரை பார்த்து சொன்னார். பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் எழுந்து வந்து ஸ்ரீராமுலுவை சந்தித்து 4 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். சட்டசபையில் நடந்த இந்த நிகழ்வு நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story