பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் கால் நசுங்கியது - பார்க்க வந்தவர்களின் ஆட்டோ மரத்தில் மோதி 11 பெண்கள் காயம்
பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவனின் கால் நசுங்கிய நிலையில் தகவல் அறிந்து அவனை பார்க்க வந்தவர்களின் ஆட்டோ மரத்தில் மோதியதில் 11 பெண்கள் காயம் அடைந்தார்கள்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் வத்திராயிருப்பு இந்து மேல் நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பஸ் ஏறுவதற்காக முத்தாலம்மன்சாவடிக்கு வந்தான். அங்கு மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை கண்டு நொண்டிஅம்மன் கோவில் தெரு பஸ் நிறுத்தத்துக்கு சென்றுள்ளான். அங்கு வந்த டவுன் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் முன் பக்க படிக்கட்டு வழியாக ஏற முயன்றான். அப்போது கால் தவறி கீழே விழுந்துவிட்டான்.
எதிர்பாராதவகையில் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறியதில் கால் நசுங்கி வெங்கடேசன் படுகாயம் அடைந்தான். அவன் மேல் சிகிச்சைக்காக ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டான். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் எனவும் மாலை நேரங்களில் வெளியூர் செல்லும் பள்ளி மாணவர்களின் கூட்டம் பஜார் பகுதியில் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தினை முறைப்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெங்கடேசன் விபத்தில் சிக்கிய செய்தியை கேள்விப்பட்ட அவரது உறவினர்களான 11 பெண்கள் ஷேர் ஆட்டோவில் வத்திராயிருப்பு நோக்கி வந்த னர். ஆட்டோ கூமாபட்டி மூலக்கரை அருகே வந்தபோது அங்கிருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் 11 பெண்களும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு போலீசார் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story