பாம்பன் பாலத்தில் வரும்போது, படிக்கட்டில் அமர்ந்து கடலை ரசிக்கும் பயணிகளால் தொடரும் விபத்து


பாம்பன் பாலத்தில் வரும்போது, படிக்கட்டில் அமர்ந்து கடலை ரசிக்கும் பயணிகளால் தொடரும் விபத்து
x
தினத்தந்தி 19 July 2019 4:15 AM IST (Updated: 19 July 2019 6:08 AM IST)
t-max-icont-min-icon

கடலில் அமைந்துள்ள பாம்பன் பாலத்தில் ரெயில் வரும் போது படிக்கட்டில் பயணிக்கும் பயணிகள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை, மதுரை, திருச்சிக்கு ரெயில்கள் செல்கின்றன. இதேபோல் வாரத்தில் 3 நாட்கள் கன்னியாகுமரி, திருப்பதி, ஒகா, வாரணாசிக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ராமேசுவரம் வந்து செல்லும் அனைத்து ரெயில்களுமே கடலில் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் வழியாக சென்று வருகின்றன.

இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில்கள் செல்லும் போது கடலை ரசிக்கும் ஆர்வத்தில் பயணிகள் பலர் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்த படியும், தொங்கிய படியும், ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடலை பார்க்கும் ஆர்வத்தில் படிக்கட்டில் அமர்ந்த படி செல்போனில் செல்பி எடுப்பதும், வீடியோ எடுப்பதும் தொடர்கின்றன.

இவ்வாறு படிக்கட்டில் பயணம் செய்த பலர் கடலில் தவறி விழுந்து இறந்து போனதுடன் பலர் பலத்த காயமும் அடைந்துள்ளனர். படிக்கட்டுகளில் பயணம் செய்யக் கூடாது என்று ரெயில்வே போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கையை பயணிகள் பொருட்படுத்துவது கிடையாது. விபத்துகள் தொடர்கின்றன.

ஆகவே ரெயில்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தி படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெயிலின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை பயணிகள் தாங்களாகவே முன் வந்து நிறுத்தினால் விபத்துகள் முழுமையாக குறையும் என்பதை பயணிகள் அனைவரும் உணர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Next Story