வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்பு 19 மனுக்கள் தள்ளுபடி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பரிசீலனையின்முடிவில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்றுமுன்தினம் வேட்புமனுதாக்கல் முடிவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுக்கள்மீதான பரிசீலனை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலச்சந்தர் மற்றும் பலரும், தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர்ஆனந்த், வில்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட மற்ற வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.
வரிசையாக ஒவ்வொரு மனுவாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனுவை பரிசீலனைக்கு எடுத்தபோது தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோன்று ஏ.சி.சண்முகம் புதியநீதிக்கட்சி நிறுவனத்தலைவர். அவர் அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது. அவருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கூடாது. அவருடைய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தி.மு.க. சார்பில் வில்சன் எம்.பி. மனுகொடுத்தார்.
அதற்கு அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறார். அவருடைய மனுவை தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மனு பரிசீலனைக்கு எடுத்தபோது, கடந்த தேர்தலின்போது பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கதிர்ஆனந்த் மீது புகார் உள்ளது. எனவே அவருடைய வேட்புமனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அ.தி.மு.க. வழக்கறிஞர் பாலச்சந்தர் கோரிக்கைவைத்து மனு கொடுத்தார். தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காட்பிரே நோபிள் என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஏ.சி.சண்முகம், கதிர்ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. மற்ற வேட்பாளர்களின் மனுக்கள்மீதான பரிசீலனை நடந்தது. அனைத்து மனுக்கள்மீதான பரிசீலனை முடிந்த பிறகு ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் உரிய விளக்கம் அளித்ததை தொடர்ந்து இருவருடை மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவில் 31 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 43 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் 3 பேர் மாற்று வேட்பாளர்கள். மொத்தம் 50 மனுக்கள் பெறப்பட்டிருந்தது. மனுக்கள்மீதான பரிசீலனையில் 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 19 மனுக்கள் பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதவிர ஒரு மனு முகாம் அலுவலகத்தில் கவரில் வைத்து கொடுத்துள்ளனர். அது வேட்புமனு என்று அவர்கள் கூறவில்லை. முறையாக மனு கொடுக்காததால் அந்த மனு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மற்ற மனுக்கள் மீதான பரிசீலனை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. இறுதியில் இருதரப்பினரும் உரிய காரணங்களை தெரிவித்ததன் அடிப்படையில் அவர்களுடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வருகிற 22-ந் தேதி மனுக்கள் வாபஸ்பெற இறுதி நாளாகும் என்றார்.
தொடர்ந்து கலெக்டரிடம், கடந்தமுறை பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் நிறுத்தப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். அவருடைய மனு எந்த அடிப்படையில் ஏற்கப்பட்டது என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கலெக்டர் கடந்த 9-ந் தேதி தேர்தல் ஆணையம் ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது. அதில் எந்தெந்த வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அவருடைய பெயர் இல்லை. அதனால் அவருடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story