கொளக்குடி கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து அதிகாரி ஆய்வு


கொளக்குடி கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 19 July 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

கொளக்குடி கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா கொளக்குடி கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் படைப்புழு தாக்குதல் உள்ளதா? என்பது குறித்து திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி பூச்சியியல் பேராசிரியர் துரைசாமி, உதவி பேராசிரியர் கோவிந்தன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் ஏழுமலை, அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது:-

கோடை மழை பெய்தவுடன் நிலத்தினை ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் நிலத்தில் உள்ள படைப்புழு மற்றும் இதர புழுக்களின் கூட்டுப்புழுக்கள் மேலே வந்து சூரிய ஒளி படுவதாலும், பறவைகளுக்கு உணவாகவும் அழிக்கப்படுகிறது. மக்காச்சோளம் விதைப்புக்கு முன் கடைசி உழவில் ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழ வேண்டும். மக்காச்சோளம் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி அவசியம்.

பத்து வரிசைக்கு இடையில் 75 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு விதைப்பு செய்தல் வேண்டும். இதனால் பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் இதர பணிகள் செய்திட இடையூறு இன்றி எளிதாக இருக்கும். வரப்புப் பயிராக தட்டைபயறு, எள் மற்றும் சூரியகாந்தி முதலிய பயிர்களையும், ஊடுபயிராக பாசிப்பயறு முதலிய பயிர்களையும் பயிரிடுவதால் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை தவிர்க்கலாம்.

வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்திட உயிரியல் மருந்தான மெட்டாரைசியம் அனிசோபிலே 8 கிராம் அளவினை 1 லிட்டர் நீரில் கலந்து விதைப்பு செய்த 40 முதல் 45 நாட்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இந்த வழிமுறைகளை கடைபிடித்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பினை தவிர்த்திடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story