காரிமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


காரிமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி-முக்குளம் சாலையில் குடியிருந்து வருபவர் மங்கம்மாள் (வயது 32). கணவரை இழந்தவர். இவருக்கு பிரியா, என்ற மகளும், பிரவின்குமார் என்ற மகனும் உள்ளனர். மங்கம்மாள் காரிமங்கலம் ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகில் இயங்கி வரும் காலி மது பாட்டில்களை கழுவும் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு மங்கம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். மதியம் அவர் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மங்கம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் செயின் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அவர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கம்மாள் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தர்மபுரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story