மாவட்டத்தில் 1,193 காசநோயாளிகளுக்கு சிகிச்சை கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


மாவட்டத்தில் 1,193 காசநோயாளிகளுக்கு சிகிச்சை கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 4:30 AM IST (Updated: 19 July 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இதுவரை 1,193 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தின் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான காசநோய் தடுப்புக்குழு கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமல் வரும் போதும், தும்மல் வரும் போதும் காற்றின் மூலம் காசநோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. தொடர் இருமல், மாலை நேர காய்ச்சல், உடம்பு எடை குறைதல், தொடர் சளி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தால் காசநோயாக இருக்கலாம்.

இந்த நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவதன் மூலம் காசநோயில் இருந்து விடுபடலாம்.

மாவட்டத்தில் 2017-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 104 காசநோயாளிகளும், 2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 192 காசநோயாளிகளும், 2019-ம் ஆண்டில் இதுவரை 1,193 காசநோயாளிகளும் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதம் ரூ.ஆயிரமும், மத்திய அரசின் சார்பில் நிக்‌ஷய போஷன் யோஜனா திட்டத்தின் மூலம் மாதம் ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் காசநோயாளிகளை கண்டறிய மாவட்ட அளவில் தடுப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் முகாம்கள் நடத்தப்படுவதோடு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகிறது.

மேலும் மாவட்ட காசநோய் தடுப்பு குழுவானது விடுபட்ட காசநோயாளிகளை கண்டறிந்து தொடர் சிகிச்சை அளிப்பதோடு, அவர்களுக்கு அரசின் உதவித்தொகைகள் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காசநோய் குறித்து விழிப்புணர்வு பெறுவதுடன் தங்கள் பகுதியில் தொடர் இருமலால் பாதிக்கப்பட்ட நபர்களை அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். வருகிற 2025-ம் ஆண்டுக்குள் நாமக்கல் மாவட்டத்தில் காசநோயை முற்றிலும் ஒழிக்க துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.

கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் தேன்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ரமேஷ்குமார், துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் ஜெயந்தினி, துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் கணபதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (காசநோய்) கபில் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், இந்திய மருத்துவ சங்கம், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story