மாவட்டத்தில் 31-ந் தேதி முதல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


மாவட்டத்தில் 31-ந் தேதி முதல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 19 July 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடத்துவது குறித்த முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசியதாவது:- மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 55 சிறப்பாசிரியர்களும், 14 இயன்முறை (பிசியோதெரபிஸ்ட்) பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வட்டார அளவில் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. முகாம் மூலமாக 6 முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

2018-2019-ம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் 6 முதல் 18 வயது வரை உள்ள 2,916 மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 357 மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 34 மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களில் தற்போது 4,158 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளனர். 2019-2020-ம் கல்வியாண்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் வட்டாரம் வாரியாக நடத்தப்பட உள்ளது.

அதன்படி வருகிற 31-ந் தேதி மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 2-ந் தேதி வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 5-ந் தேதி மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 6-ந் தேதி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 7-ந் தேதி எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

இதேபோல் 8-ந் தேதி எலச்சிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந் தேதி கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 13-ந் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 14-ந் தேதி சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந் தேதி ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந் தேதி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 20-ந் தேதி வாழவந்திநாடு ஜி.ஆர்.டி மேல்நிலைப்பள்ளியிலும், 21-ந் தேதி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 22-ந் தேதி பள்ளிபாளையம் ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி உஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அரசுதுறை அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story