சரபங்கா நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு


சரபங்கா நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

சரபங்கா நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எடப்பாடி, 

ஏற்காட்டில் உற்பத்தியாகும் சரபங்கா நதி எடப்பாடி வழியாக ஓடி தேவூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நதியில் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடைகள் வழியாக கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. மொத்தம் 19 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது.

இதனால் எடப்பாடி பகுதியில் செல்லும் சரபங்கா நதி மாசடைந்து உள்ளது. மேலும் கழிவுநீர் கலப்பதால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நதியில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சரபங்கா நதியில் நேரிடையாக கழிவுநீர் கலக்கும் இடங்களில் சுத்திகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டு, அதில் கழிவுநீரை சுத்திகரித்து அதன் பின்னர் ஆற்றில் கலப்பது அல்லது விவசாய நிலங்களுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லிங்கமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் எடப்பாடிக்கு வந்தனர்.

அவர்கள் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். இந்த குழுவினருடன் நிலநீர் வல்லுனர் முத்துக்குமாரசாமி, நிர்வாக பொறியாளர் செங்கோடன், உதவி நிர்வாக பொறியாளர் பொன்னுசாமி, எடப்பாடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எடப்பாடி சரபங்கா நதியில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் விரைவில் அமைக்கப்படும், என்றனர்.

Next Story