சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
அரியலூர்,
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5-வது அரியலூர் புத்தக திருவிழா அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழாவின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக திருவிழாவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
பலத்த மழையின் காரணமாக இந்த விழாவில் கவர்னர் பேசமாட்டார். திருச்சியில் விமானத்தை பிடிப்பதற்காக போய்விடுவார் என அறிவிக்கப்பட்டிருந்ததாக நான் அறிகிறேன். இந்த புத்தக திருவிழாவுக்கு வந்துள்ள நீங்கள் எல்லோரும் மிக ஆர்வமாக இருப்பதால் சில வார்த்தைகள் பேசிவிட்டு போகலாம் என்று வந்தேன். இது மிகப்பெரிய திருவிழா. இங்கு தமிழ் கலாசாரத்தை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சோழ மன்னர்களின் தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிர்மானிக்கப்பட்டிருந்தது. தமிழ் கலாசாரம், கலை, கட்டிடக்கலை வளர்ச்சிக்கு சோழ மன்னர்கள் ஏராளமான பணிகள் செய்துள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் சில புத்தகங்களை எடுத்து பார்த்தேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகங்கள் படிப்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புத்தகங்கள் அறிவு வளர்ச்சிக்கு ஒரு பாலமாக உள்ளது என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு நிறைய புத்தங்களை படிக்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வத்தையும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் பெறலாம். இளைஞர்கள் போதுமான ஞானத்தை பெறவும், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளவும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே இளைஞர்கள் நல்ல புத்தங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். தேசத்தந்தை மகாத்மா காந்தி புத்தகங்கள் படித்ததன் மூலம் தான் தனது வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த ஜான் ரஸ்கின் எழுதிய புத்தகங்களை படித்ததன் மூலம் தான் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அரியலூரில் நடைபெறும் இந்த புத்தக திருவிழா போன்று தமிழகம் முழுவதும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை கைவிட்டு அந்த நேரத்தை நல்ல புத்தகங்களை தேடுவதற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்கள் நமக்கு நல்ல நண்பன். அவற்றின் மூலம் நல்ல தகவல்களையும், அறிவினையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆங்கிலத்தில் பேசிய கவர்னர் தொடக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என தமிழிலும், இறுதியாக நன்றி வணக்கம் என மீண்டும் தமிழில் கூறி முடித்தார். அதன்பின்னர் அவர் திருச்சி விமானநிலையத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அரியலூரில் நேற்று பகல் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அரியலூரில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. புத்தக திருவிழா நடந்த அரங்கம், மேடையை சுற்றி மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் கவர்னர் குத்துவிளக்கேற்றி வைத்து விட்டு சென்றுவிடுவார் என நிகழ்ச்சி தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கவர்னர் பன்வாரிலால்புரோகித் குத்துவிளக்கேற்றிய பின் சிறிது நேரம் பேசினார்.
விழா மேடையில் பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் கவர்னர் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தக திருவிழா வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும். தமிழகத்தின் தலை சிறந்த பதிப்பகங்களில் இருந்து காமராஜர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விளக்கும் புத்தகங்களும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச புத்தகங்கள், உணவு பழக்க வழக்கங்களை விளக்கும் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் உள்பட அனைத்து தரப்பு புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ‘தினத்தந்தி’ பதிப்பகத்தின் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 24-வது அரங்கில் ‘தினத்தந்தி’ பதிப்பக புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story