அரியலூரில் பலத்த மழையால் ஏரிகள் நிரம்பின பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி


அரியலூரில் பலத்த மழையால் ஏரிகள் நிரம்பின பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 19 July 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் நேற்று பெய்த பலத்த மழையால் ஏரிகள் நிரம்பியதால் பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரியலூர், 

அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை முடிக்கொண்டும் சாலையில் சென்றனர். இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரத்தில் லேசான மழையும் பெய்து வந்தது. அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அரியலூரில் நேற்று மதியம் 1.30 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் பலத்த மழையாக 2½ மணி நேரம் விடாமல் கொட்டி தீர்த்தது. மழை பெய்ததால் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஆண், பெண்கள் குடை பிடித்தவாறு வேகமாக நடந்து சென்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். இந்த மழையால் சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

நேற்று பெய்த பலத்த மழையால் அரியலூர் நகரில் உள்ள செட்டி ஏரி, சித்தேரி, குறிஞ்சி ஏரி, பள்ளேரி, அய்யப்பன் ஏரி ஆகிய ஏரிகளும், சிறிய குட்டைகளும் நிரம்பின. செந்துறை சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் மழைநீரால் சூழ்ந்தது. தமிழக கவர்னர் கலந்து கொண்ட புத்தக திருவிழா நடந்த அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் மழையால் மூழ்கியது. இதனால் புத்தக திருவிழாவில் உள்ள புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. நேற்று மாலை பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து செல்லும் மாணவ- மாணவிகள் நனைந்தபடியே வீட்டிற்கு சிரமத்துடன் சென்றனர். இதில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால், சில வாகனங்கள் நீந்திய படி சென்றன.

இதேபோல் பெரம்பலூரில் நேற்று மதியம் திடீரென்று பெய்த மழை விட்டு விட்டு சிறிது நேரம் பெய்தது. அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆடி முன் பட்டத்தில் மழை பெய்துள்ளதால் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வீடுகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.

Next Story