பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து விபத்து: அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி; 19 பேர் படுகாயம் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து விபத்து: அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி; 19 பேர் படுகாயம் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 July 2019 11:30 PM GMT (Updated: 19 July 2019 6:34 PM GMT)

பெரம்பலூர் அருகே ஏற்பட்ட அடுத்தடுத்து நடந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்களமேடு, 

சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள வில்லாபுரம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ஒரு கன்டெய்னர் லாரி மீது ஆம்னி பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து, அதன் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஆனால் கன்டெய்னர் லாரியை, அதன் டிரைவர் நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ஆம்னி பஸ்சின் டிரைவர், தான் ஓட்டி வந்த பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, பயணிகளை இறக்கி வேறொரு பஸ்சை வரவழைத்து அதில் ஏற்றி அனுப்பி வைத்தார். இந்த விபத்தால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த சாலை வழியாக சென்னையில் இருந்து மதுரை நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்தது. மேலும் விபத்து நடந்திருப்பதால் சம்பவ இடத்தில் குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதனை பின்தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து மதுரை நோக்கி டேங்கர் லாரியும் வந்து கொண்டிருந்தது. இந் நிலையில் சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளுடன் வந்த அரசு விரைவு பஸ் முன்னால் சரக்கு லாரியையும், டேங்கர் லாரியையும் முந்த முயன்றது. அப்போது வேலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற அரசு விரைவு பஸ் மீது பின்புறம் பயங்கரமாக மோதியதில் திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் சரக்கு லாரியின் பின்புறம் வேகமாக சென்று மோதியது.

மேலும் டேங்கர் லாரி அரசு பஸ் மீது மோதியது. அடுத்தடுத்த விபத்துகளினால் திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சின் டிரைவரான தேனி மாவட்டம், சக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 45) இருக்கையில் அமர்ந்தவாறு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த பஸ்சின் பின்புறம் இருக்கையில் அமர்ந்து தூங்கியவாறு பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம், பூச்சிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துகளில் 2 அரசு பஸ்களிலும் பயணம் செய்த சக்கம்பட்டியை சேர்ந்த சந்திரா(47) நிலக்கோட்டையை சேர்ந்த லெட்சுமி(28) கலிச்சமேட்டை சேர்ந்த செந்தாமரை(27) திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை சேர்ந்த கருப்புசாமி(28), அவரது மனைவி முத்துலட்சுமி(22), இவர்களது 2½ வயது மகள் மகாலட்சுமி, மதுரையை சேர்ந்த கருப்பையா(74), தேனி மாவட்டம், சக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(52), அவரது மனைவி சாந்தி(42), இவர்களது மகன் பிரவீன்(8) மற்றும் மாரிமுத்துவின் அண்ணன் கருப்பசாமி(54), அவரது மனைவி கோமதி, இவர்களது மகன் சிவசங்கர், மயிலாடுதுறையை சேர்ந்த அருணாசலம்(35), திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்குமார்(30) உள்பட 19 பேர் பஸ்சின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் மற்றும் மங்களமேடு போலீஸ் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் மற்றும் காயம் அடைந்தவர்களை பஸ்களில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துகளில் உயிரிழந்த அரசு பஸ் டிரைவர் மாரிமுத்து, பயணி சுரேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சந்திரா என்கிற பெண் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தொடர் விபத்துகளால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் போக்குவரத்தை சிறிது தூரத்திற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றியமைத்து ஒழுங்குப்படுத்தினர். இதையடுத்து தொடர் விபத்துகளில் சிக்கிய பஸ்கள், லாரிகளை போலீசார் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்துகள் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பஸ்சின் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காயம்பட்டியை சேர்ந்த கண்ணதாசனை (49) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story