நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த விவசாயிகளின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, வேளாண்மை இணை இயக்குனர் ஜவஹரிபாய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மலையடிவார பகுதிகளில் உள்ள விளை பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் தடுக்க தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட விலங்குகளை விரட்டும் மருந்து குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமரின் விவசாயிகள் ஊக்க உதவித்தொகை வழங்கும் திட்டம், உழவர் கடன் அட்டை வழங்கும் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

இயற்கை பூச்சிக் கொல்லி என்ற பெயரில் தடை செய்யப்பட்ட ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இவற்றை கண்டறிந்து தடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பறிபோவதை தடுக்க வேண்டும். நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பறிபோகும் என்றும், ஆய்வு செய்ய உள்ள மலைப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் மக்களிடமும், விவசாயிகளிடமும் அச்சம் உள்ளது. விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தெரிவித்த கருத்துகள் ஆறுதலை தருகிறது. எனவே, நியூட்ரினோ திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

டீசல், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால், பயிர்க்கடனாக வழங்கும் தொகையை அதிகரிக்க வேண்டும். முல்லைப்பெரியாற்றில் இருந்து ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை தீவனத்தில் கலப்படம் உள்ளது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, உரிய ஆய்வுகள் செய்ய வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கான நாற்றாங்கால் அமைப்பதற்கு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். குச்சனூரில் பன்றிகள் தொல்லை அதிகரித்து உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும்.

காமயகவுண்டன்பட்டியில் திராட்சை தோட்டங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. பெண் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த ஆண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ஆட்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவாரம் பகுதிகளில் எலுமிச்சை மரங்களில் விசித்திரமான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மரங்கள் முழுவதும் பட்டுப்போய்விடுகின்றன. எனவே, இதற்கான காரணத்தை ஆய்வு செய்து உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளை நிலங்களில் உள்ள மின்மாற்றிகள் பழுதானால் அவற்றை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள், விவசாயிகளிடம் இருந்து பணம் வசூல் செய்கின்றனர். இதற்காக அதிகாரிகள் இடைத்தரகர்களை நியமித்துள்ளனர். கண்மாய்களில் மீன் வளர்ப்பு உரிமத்தை விவசாய சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

பின்னர் கலெக்டர் பதில் அளிக்கையில், ‘விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய அதிகாரிகள் பணம் கேட்கிறார்கள் என்றால் விவசாயிகள் பணம் கொடுக்கத் தேவையில்லை. யார் பணம் கேட்கிறார் என்று புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எலுமிச்சை மரங்கள் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள்’ என்றார். 

Next Story