கோவையில் 3-வது நாளாக தொடரும் சம்பவம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - பொதுமக்கள் நடமாட்டத்தால் மர்ம ஆசாமிகள் தப்பி ஓட்டம்
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மர்ம ஆசாமிகள் பொதுமக்கள் நடமாட்டத்தால் மரத்தை போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
கோவை,
கோவையில் கடந்த 17-ந் தேதி இரவு காட்டூர், சாய் பாபாகாலனி ஆகிய பகுதிகளில் வளர்ந்திருந்த சந்தன மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்த முயன்றனர். ஆனால் இதை காவலாளி பார்த்து விட்டதால் அந்த கும்பல் தப்பி சென்றது. மறுநாள் 18-ந் தேதி இரவு சாய்பாபா காலனி முருகன் மில் பின்பகுதியில் பொது பாதையில் வளர்ந்திருந்த சந்தன மரங்களை வெட்டி ஒரு காரில் ஏற்றி மர்ம ஆசாமிகள் கடத்த முயன்றனர்.
ஆனால் இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடத்தல் கும்பல் வந்த காரை போலீசார் வழிமறித்தபோது கார் நிற்காமல் சென்றது. ஆனால் போலீசார் அந்த காரை துரத்திச் சென்ற போதும் மர்ம ஆசாமிகள் காரை விட்டு விட்டு தப்பி சென்றனர். காரில் இருந்த சந்தன மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு தனியார் அலுவலகத்துக்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்திருந்த ஒரு சந்தனமரத்தை மர்ம ஆசாமிகள் நேற்றுமுன்தினம் இரவு வெட்டியுள்ளனர். ஆனால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கடத்தல் ஆசாமிகள் மரத்தை அப்படியே போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
ரேஸ்கோர்ஸ் சாலையின் ஒரு பகுதியில் நடைபயிற்சி செல்பவர்களுக்கான பாதை உள்ளது. அதற்கு எதிரில் சாலையின் மற்றொரு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்திருந்த சந்தன மரத்தை தான் மர்ம கும்பல் வெட்டியுள்ளது. காலை நேரத்தில் நடைபயிற்சிக்காக பொதுமக்கள் வந்ததை பார்த்ததும் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சந்தன மர கடத்தல் கும்பல் பகல் நேரங்களில் எந்தெந்த இடங்களில் சந்தன மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்று நோட்டமிட்டுக் கொள்வார்கள். இரவில் வேன், ஆட்டோ அல்லாமல் கார்களில் வந்து சந்தன மரங்களை சத்தமில்லாமல் வெட்டி கடத்தி சென்று விடுகிறார்கள். இங்கு வெட்டப்படும் சந்தன மரங்கள் அனைத்தும் கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுகின்றன.
இந்த கடத்தல் கும்பலில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சந்தன மரங்களை குறி வைத்து வெட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக சந்தன மரகடத்தல் கும்பலின் கைவரிசை அதிகரித்துள்ளதின் மூலம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பரவலாக பிரிந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கை வனத்துறையினர் தான் விசாரிப்பார்கள். எனவே இந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களின் பின்னணி என்ன? என்பன போன்ற விவரங்கள் வெளிப்படையாக தெரிவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story