ஊட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி - அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை நீலகிரி மாவட்ட துணைத்தலைவர் விஜயா தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழுவில் அறிவித்தப்படி அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அவர்களை அங்கன்வாடி மைய பணிகளை தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கன்வாடி மைய பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனாலும் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்ட தலைவர் சசிகலா கூறியதாவது:-
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 486 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் உதவியாளர்கள், ஊழியர்கள் என சுமார் 450 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் ஆரம்பிக்கப்படுவதால், அங்கன்வாடி ஊழியர்களின் பணி பறிபோகும் நிலை உள்ளது. எனவே அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தாமல், அங்கன்வாடி மையங்களில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி கொடையாக ரூ.5 லட்சமும், இறுதியாக பெற்ற ஊதியத்தில் பாதி தொகையை மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்ப்பிணிகள், சிசு எடை குறைவு மற்றும் கர்ப்பிணி இறப்பு, சிசு இறப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஊழியர்களை தண்டிக்கக்கூடாது.
நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது. 5 ஆண்டு பணி முடித்த ஊழியர்களை மட்டுமே கிராம செவிலியர் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். அந்த காலி இடத்தை உடனே நிரப்ப வேண்டும். அங்கன்வாடி மையத்தில் செலவு செய்யும் எரிவாயு தொகையை முழுமையாக அரசு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story