அரசு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலுக்கு முயற்சி


அரசு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலுக்கு முயற்சி
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 20 July 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

கந்தர்வகோட்டை, 

கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதி ஊராட்சியில் செயல்பட்டு வந்த அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2011-ம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி தொடர்ந்து நடுநிலைப்பள்ளி பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2015-16 ஆண்டில் சுமார் ரூ.1 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அந்த பணிகள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பே முடிவுற்ற நிலையில் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படாமலேயே உள்ளது.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சாலையில் அமர்ந்து படிக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். இதையடுத்து கந்தர்வகோட்டை தாசில்தார் கலைமணி தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இம்மாதம் 1-ந் தேதிக்குள் புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் கூறியபடி பள்ளி கட்டிடம் இன்னும் திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அரசப்பன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) சாந்தி, மாவட்ட கல்வி அதிகாரி ராகவன், கந்தர்வகோட்டை தாசில்தார் கலைமணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 22-ந் தேதி கண்டிப்பாக புதிய பள்ளி கட்டிடம் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story