ஆடி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 20 July 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஆடிவெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், 

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்தை இல்லாதோருக்கு மகப்பேறு கிட்டும், வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஜதீகமாக கருதப்படுகிறது.

அந்தவகையில் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்புஅலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் விரதமிருந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர். அப்போது அவர்கள் கோவிலின் முன்பு தீபமேற்றியும், சூடமேற்றியும், பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் பக்தர்கள் சார்பில் கேப்பை கூழ் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை அனைவரும் வாங்கி அருந்தி விட்டு சென்றனர்.

இதேபோல் கரூர் வேம்புமாரியம்மன் கோவிலில் மாரி யம்மனுக்கு நகை மற்றும் பூக்களால் சமயபுரம் மாரியம்மன் உருவத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பொதுமக்கள் பக்தியுடன் வேண்டி கொண்டனர். இதே போல் கரூரிலுள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நடந்த ஆடிவெள்ளி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம் மலைவீதியில் மகாமாரியம்மன் கோலில் உள்ளது. இக்கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு புடவை உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்து, எலுமிச்சை பழங்களால் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல புன்செய்புகழூரில் உள்ள நாணப்பரப்பு மாரியம்மன் கோவில், காகித ஆலை டி.என்.பி.எல் குடியிருப்பில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், தளவாபாளையம் மாரியம்மன் கோவில், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story