ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் புதிய பாடங்கள் குறித்து கருத்தாளர்களுக்கு பயிற்சி கல்வி அதிகாரி ஆய்வு


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் புதிய பாடங்கள் குறித்து கருத்தாளர்களுக்கு பயிற்சி கல்வி அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2019 9:30 PM GMT (Updated: 19 July 2019 7:13 PM GMT)

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ், தொடக்க நிலை கல்வியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடங்கள் குறித்து கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.

கரூர், 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்தும் நோக்கிலும், மாணவ-மாணவிகளின் தனிதிறன்களை கண்டறிந்து மேம்படுத்துவதோடு எளியவழியில் அதிகளவிலான பாடங்களை கற்று கொள்ளும் பொருட்டும் கல்வித்துறை சார்பில் பல்வேறு புதிய நடைமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த கல்விஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் 2, 3, 4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், தாந்தோன்றிமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கடவூர், தோகைமலை உள்பட 8 ஒன்றியங்களை சேர்ந்த கருத்தாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 80 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு 2 முதல் 5-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டங்கள் பற்றி விளக்கி கூறும் வகையிலான பயிற்சி வகுப்பு கரூர் அருகேயுள்ள பசுபதிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 17-ந்தேதி தொடங்கி நடந்து வருகி றது.

இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகளில் இடம்பெற்றுள்ள கூடுதல் தகவல்களை எளிய வழியில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி எப்படி கற்பிப்பது? வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வு எழுதவிடாமல் மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்துவது தொடர்பான கற்றல் வழியினை கையாள்வது? கணினி புரொஜெக்டர் மூலம் நவீன முறையில் பாடம் எடுப்பது உள்ளிட்டவை குறித்து “சமக்ரா சிக்‌ஷா” எனும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று காலை இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிய பாடப்புத்தகங்கள் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் புதுஉத்வேகத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே மாணவர்களின் படிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அனைவரும் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட உதவி திட்ட அதிகாரி மகாலிங்கம், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாண்டீஸ்வரி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தாளர்களுக்கான இந்த பயிற்சி வகுப்பு இன்று (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட நடைமுறைகள் குறித்து கரூர் மாவட்ட தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, இந்த கருத்தாளர்கள் வருகிற 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பயிற்சி அளிக்கின்றனர். அதற்கேற்றாற்போல் தொடக்க கல்வி ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட கற்பிப்பு முறையினை கடைபிடித்து பாடங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story