அடையாறில் மாயமானவர் வழக்கில் திடீர் திருப்பம்: படகில் அழைத்துச்சென்று நடுக்கடலில் அடித்துக் கொலை


அடையாறில் மாயமானவர் வழக்கில் திடீர் திருப்பம்: படகில் அழைத்துச்சென்று நடுக்கடலில் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 20 July 2019 4:30 AM IST (Updated: 20 July 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

அடையாறில் மாயமானவர் வழக்கில் திடீர் திருப்பமாக அவர், படகில் கடலுக்குள் அழைத்து சென்று அடித்துக்கொலை செய்யப்பட்டு, உடலை கடலுக்குள் வீசியது தெரிந்தது.

அடையாறு,

பெண் சபலத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் வக்கீல் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் பரத்வாஜ்(வயது 50). திருமணமாகாத இவர், வயதான தனது இரு சித்திகளுடன் வசித்து வந்தார்.

கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ் பரத்வாஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அடையாறு போலீஸ் நிலையத்தில் பரத்வாஜ் மாயமானதாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரத்வாஜை தேடிவந்தனர்.

இந்த நிலையில், அடையாறு உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணையை தொடங்கினர். பரத்வாஜ் மாயமான அன்று தனது செல்போனை, கார் டிரைவரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆட்டோவில் சென்றது தெரிந்தது.

அவரது டிரைவரிடம் விசாரித்தபோது, பரத்வாஜ் அடையாறில் உள்ள வக்கீல் பிரீத்தி என்பவர் வீட்டுக்கு செல்வதாக கூறியதாக தெரிவித்தார். வக்கீல் பிரீத்தி வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தபோது, ஒரு வழக்கு சம்பந்தமாக என்னை சந்தித்து விட்டு உடனடியாக அவர் சென்று விட்டதாக தெரிவித்தார்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்தனர். அதில் பரத்வாஜ், பிரீத்தி வீட்டில் இருந்து ஆட்டோவில் செல்வதை கண்டுபிடித்தனர். அதேவேளையில் சம்பவம் நடந்த அன்று பிரீத்தி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் பரத்வாஜ் சென்ற ஆட்டோ எண்ணை வைத்து அதன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பரத்வாஜை இறக்கி விட்டதாக தெரிவித்தார். இதனால் குழப்பம் அடைந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் பிரீத்தியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

அதில் பரத்வாஜ் சென்ற அதே பாதையில் காசிமேடு வரை அவரும் சென்றதும், காசிமேடு பகுதியில் இருந்து ஒரு செல்போனில் அடிக்கடி பிரீத்தி பேசியதும் தெரியவந்தது.

இதற்கிடையில் பிரீத்தி தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அவர் காசிமேடு பகுதியில் பேசிய செல்போன் எண் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற குடுமி பிரகாஷ்(30) என்பவருடைய செல்போன் என கண்டுபிடித்த போலீசார், பிரகாசை ரகசியமாக கண்காணித்து பிடித்தனர்.

பிடிபட்ட பிரகாஷிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சும் வகையிலான திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு:-

பரத்வாஜ் வீட்டில் அடையாறை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். அவர் மீது ஏற்பட்ட சபலத்தாலும், ஆசையாலும் அந்த பெண்ணுக்கு அவ்வப்போது பரத்வாஜ் சுமார் ரூ.4 லட்சம் வரை பணம் கொடுத்து உதவி செய்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் ஒருநாள் வேலைக்கார பெண்ணிடம் பரத்வாஜ் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அதன்பிறகு வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தரும்படி பரத்வாஜ் கேட்டார்.

இதனால் பயந்து போன வேலைக்கார பெண், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் தனக்கு தெரிந்த வக்கீல் பிரீத்தியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இது தொடர்பாக பரத்வாஜிடம் சமரசம் பேச சென்ற பிரீத்தி, பரத்வாஜிடம் அதிகமாக பணம் இருப்பதையும், வேலைக்கார பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்ற சபலத்துடன் அவர் இருப்பதையும் தெரிந்து கொண்டார்.

இதை வைத்து பரத்வாஜிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்ட பிரீத்தி, வேலைக்கார பெண்ணுடன் சேர்த்து வைப்பதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்று கூறி சுமார் ரூ.65 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு பிரீத்தியிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கோபமடைந்த பரத்வாஜ், வேலைக்கார பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வைக்கும்படியும், இல்லாவிட்டால் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு பிரீத்தியிடம் கோபமாக பேசினார்.

இதனால் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய பிரீத்தி, சம்பவத்தன்று வேலைக்கார பெண்ணை சம்மதிக்க வைத்து விட்டதாக கூறி, செல்போன்களை வீட்டில் வைத்துவிட்டு தன்னை வீட்டில் வந்து சந்திக்கும்படி பரத்வாஜியிடம் கூறினார்.

அதன்படி செல்போனை கார் டிரைவரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த பரத்வாஜை ஒரு ஆட்டோவில் ஏற்றி பாரிமுனையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே செல்லும்படி கூறினார். பின்னர் அங்கிருந்து காசிமேடு கடற்கரைக்கு அழைத்து சென்று ஒரு படகில் ஏற்றி சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் அழைத்து சென்றார்.

அங்கு வைத்து பரத்வாஜின் பின்புறம் இருந்த பிரகாஷ், படகு துடுப்பு கட்டையால் பரத்வாஜ் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் பிரகாஷ் தனது கூட்டாளிகள் மற்றும் பிரீத்தி உதவியுடன் பரத்வாஜ் உடலை படகில் இருந்து கடலில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கரைக்கு திரும்பி விட்டனர் என்பது பிடிபட்ட பிரகாசிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாயமானதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிய அடையாறு போலீசார் பிரகாஷ் மற்றும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான சுரேஷ்(40), மனோகர்(45), ராஜா (30), சந்துரு (29) சதீஸ் (30) ஆகிய 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பெண் வக்கீல் பிரீத்தியை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடலில் வீசப்பட்ட சுரேஷ் பரத்வாஜ் உடலை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story