காதல் திருமணம் செய்த ஜோடியை கவுரவ கொலை செய்வதாக மிரட்டல் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


காதல் திருமணம் செய்த ஜோடியை கவுரவ கொலை செய்வதாக மிரட்டல் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 20 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த ஜோடியை கவுரவ கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளது. எனவே அந்த ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாகர்கோவில், 

இரணியல் அருகே கண்டன்விளை ஒடுப்புரை பகுதியை சேர்ந்தவர் நந்தா (வயது 23), நர்சிங் முடித்துள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இதே ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக அருண் (26) என்பவர் பணியாற்றினார். இவர்கள் 2 பேரும் காதலித்தனர். ஆனால் காதலுக்கு நந்தாவின் வீட்டார் எதிர்த்தனர். மேலும் நந்தாவுக்கு கட்டாய திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நந்தா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அருணை அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். அங்கு நண்பர்கள் உதவியுடன் அருணும், நந்தாவும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகி றது. தற்போது கணவன்-மனைவி 2 பேரும் நாகர்கோவிலில் வசிக்கிறார்கள்.

இந்த நிலையில் நந்தா நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நானும், அருணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் சட்டப்படி மேஜர் என்பதால் எனது திருமண வாழ்வை தீர்மானிக்க எனக்கு முழு உரிமை உண்டு. என்னை யாரும் கட்டாயப்படுத்தி வீட்டில் இருந்து அழைத்துச் செல்லவில்லை. ஆனால் தற்போது என் குடும்பத்தினர் எங்களை கவுரவ கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே எங்கள் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது நந்தாவின் கணவர் அருணும் உடன் இருந்தார்.

Next Story