கருங்கல் அருகே துணிகரம் என்ஜினீயர் வீட்டில் பூட்டை உடைத்து 67 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கருங்கல் அருகே என்ஜினீயர் வீட்டில் பூட்டை உடைத்து 67 பவுன் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கருங்கல்,
குமரி மாவட்டம் கருங்கல் அருகே குறும்பனை இனிகோ நகரை சேர்ந்தவர் சேசர் பெனான்ஸ் (வயது 41). இவர், துபாய் நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது, சேசர் பெனான்ஸ் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
அதை தொடர்ந்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக குடும்பத்தினருடன் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் சேசர் பெனான்ஸ் நேற்று காலை குடும்பத்துடன் ஊர் திரும்பினார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்ற போது, அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும் அங்கு வைத்திருந்த 67½ பவுன் நகை, ரூ.31 ஆயிரம் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
சேசர் பெனான்ஸ் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து சேசர் பெனான்ஸ் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பூட்டை உடைக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய ‘ஸ்குரு டிரைவர்’ கதவின் அருகில் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் ஓரோவும் வரவழைக்கப்பட்டது.
மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story