குடிமராமத்து பணிகளில் முறைகேடு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
குடிமராமத்து பணிகளில் முறைகேடு செய்ததாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 134 இடங்களில் உள்ள குளங்கள், நீர்நிலைகளில் ரூ.34 கோடியில் தற்போது குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் நடக்கும் இந்த பணிகளில் முறைகேடு நடப்பதாக சென்னை பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து முறைகேடு குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சேர்ந்த அதி காரிகள், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள குளங்களில் ஏற்கனவே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதும், அந்த பணிகளை தற்போது மீண்டும் அங்கு குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்ததும் தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, ஒட்டன்சத்திரம் உதவி செயற்பொறியாளர்கள் தம்பிரான் கோவன், தனசேகர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதையும் தனிக்குழுவினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணை அறிக்கையை சென்னை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை குழு அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் சுப்பிரமணி உள்பட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story