தங்க கட்டிகள் தருவதாக கூறி வாலிபரிடம் நகை அபேஸ் 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
தங்க கட்டிகள் தருவதாக கூறி, வாலிபரிடம் 3 பவுன் நகையை அபேஸ் செய்த 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி செவல்விளைபுதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் உடன்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடிக்கு பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று பிரகாஷ் வேலைக்கு செல்வதற்காக, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த ‘டிப்-டாப்’ உடை அணிந்த 2 மர்மநபர்கள், பிரகாசுடன் பேச்சு கொடுத்தனர். சிறிதுநேரத்தில் அங்கு ‘டிப்-டாப்’ உடை அணிந்த மற்றொரு மர்மநபர் வந்தார். அவர், பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரிடமும் பேச்சு கொடுத்தார்.
அப்போது அந்த நபர், வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், அங்கிருந்து விலை உயர்ந்த மடிக்கணினி, டி.வி., தங்க கட்டிகள் போன்றவற்றை வாங்கி வந்ததாகவும், அவற்றுக்கு கட்டண ரசீது கிடையாததால், அவற்றை குறைந்த விலைக்கு விற்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். அப்போது பிரகாசுடன் நின்ற 2 மர்மநபர்களும், தங்களுக்கு மடிக்கணினி, டி.வி. தருமாறு கூறினர். மேலும் அவர்கள், பிரகாசிடம் தங்க கட்டிகளை வாங்கி கொள்ளுமாறும் கூறினர்.
இதையடுத்து அந்த நபர் தன்னிடம் உள்ள பொருட்களை காண்பிப்பதற்காக, பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரையும் திருச்செந்தூர் பயணியர் விடுதி ரோட்டில் உள்ள தனிமையான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த நபர் காண்பித்த விலை உயர்ந்த டி.வி., மடிக்கணினி ஆகியவற்றை 2 நபர்களும் சேர்ந்து மொத்தம் ரூ.1 லட்சம் கொடுத்து பேரம் பேசி வாங்குவது போன்று நடித்தனர். மேலும் அவர்கள், பிரகாஷிடம், தங்க கட்டிகளை பேரம் பேசி வாங்குமாறு ஆசைவார்த்தை கூறினர்.
இதையடுத்து பிரகாஷ் தன்னிடம் போதிய பணம் இல்லை. தன்னிடம் 2 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் மட்டுமே உள்ளது என்று கூறினார். இதையடுத்து அந்த நபர், பிரகாசிடம் இரக்கம் காட்டுவது போன்று நடித்தவாறு, உங்களுடைய நல்ல குணத்துக்காக, தங்க கட்டிகளை தருகிறேன். உங்களது தங்க சங்கிலி, மோதிரத்தை தந்து விட்டு, தங்க கட்டிகளை வாங்கி செல்லுமாறு கூறினார். இதையடுத்து பிரகாஷ் தனது தங்க சங்கிலி, மோதிரத்தை கழட்டி, மர்மநபரிடம் கொடுத்து விட்டு, தங்க கட்டிகளை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் பிரகாஷ் அந்த தங்க கட்டிகளை நகை பட்டறை ஆசாரியிடம் கொண்டு சென்று காண்பித்தபோது, அவை அனைத்தும் கவரிங் என்பது தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரகாஷ், இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்த 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story