ஓடும் பஸ்சில் மீன் வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் திருட்டு மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை


ஓடும் பஸ்சில் மீன் வியாபாரியிடம் ரூ.65 ஆயிரம் திருட்டு மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 July 2019 3:30 AM IST (Updated: 20 July 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மீன் வியாபாரியிடம் ரூ.65 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). மீன் வியாபாரியான இவர் மீன்களை மொத்தமாக வாங்கி, அவற்றை பல்வேறு ஊர்களில் சென்று விற்பனை செய்து வருவது வழக்கம். இவர் சம்பவத்தன்று காயல்பட்டினத்தில் மீன் விற்பனை செய்தவர்களிடம் சென்று, பணத்தை வசூல் செய்தார்.

அங்கு வசூல் செய்த ரூ.65 ஆயிரத்தை துணிப்பையில் வைத்து கொண்டு, ஆறுமுகம் பஸ்சில் திருச்செந்தூருக்கு வந்தார். பின்னர் அவர், அங்கிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் பஸ்சில் ஏறினார்.

குலசேகரன்பட்டினத்துக்கு வந்ததும், ஆறுமுகம் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவரது துணிப்பை பிளேடால் கிழிக்கப்பட்டும், அதில் இருந்த ரூ.65 ஆயிரம் திருட்டு போனதும் தெரிய வந்தது. திருச்செந்தூரில் இருந்து பஸ்சில் வந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்மநபர் பிளேடால் துணிப்பையை கிழித்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் எதிரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் சென்று தூங்கினர். அப்போது ஊழியர்களில் ஒருவர், பெட்ரோல் பங்கில் வசூலான ரூ.30 ஆயிரத்தை கைப்பையில் வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக அந்த அறைக்குள் புகுந்து, ஊழியரின் கைப்பை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றார்.

பின்னர் கைப்பையில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் எடுத்து கொண்டு, கைப்பையை திருச்செந்தூர் ரெயில் நிலையம் அருகில் வீசிச் சென்றார். அதிகாலையில் கண்விழித்த ஊழியர்கள் கைப்பையுடன் பணம், செல்போன் ஆகியவை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story