தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பால கோபாலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் துறை மூலம் போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார துறையின் மூலம் ஆலய வளாகத்தில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
போக்குவரத்து துறையின் மூலம் கூடுதலான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் கூடுதல் பணியாளர்களை கொண்டு துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழா காலங்களில் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு பாதுகாப்பு அலுவலர் அவ்வப்போது திருவிழாவுக்கு சென்று, கடைகளில் உள்ள உணவுகளை ஆய்வு செய்ய வேண்டும். திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) உமா சங்கர், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் (பொறுப்பு) சுகுமார், பங்கு தந்தை குமார்ராஜா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story