தூத்துக்குடியில் புழுதிக்காற்று: சென்னையில் இருந்து வந்த விமானம் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டது
தூத்துக்குடியில் புழுதிக்காற்று வீசியதின் காரணமாக சென்னையில் இருந்து வந்த விமானம் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அளவு குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதே சமயத்தில் பலத்த காற்றும் வீசி வந்தது. நேற்று முன்தினம் மன்னார்வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசியதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
நேற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்று தூத்துக்குடி கடல் பகுதியில் மணிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்திலும், நிலப்பகுதியில் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைகளில் புழுதி பறந்தது. வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். அதே போன்று வாகைகுளம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த புழுதிக்காற்று வீசியது. இதனால் வானத்தில் செம்மண் போர்வை போல் காட்சி அளித்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் 74 பயணிகளுடன் பகல் 11.45 மணிக்கு வந்தது. அப்போது பயங்கர புழுதிக்காற்று வீசியதால், விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் சிறிது நேரம் வானில் வட்டமடித்தது.
தொடர்ந்து புழுதிக்காற்று வீசியதால் விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. பின்னர் அந்த விமானம் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ், கார்களில் திரும்பினர். மேலும் தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னை செல்வதற்காக 72 பயணிகள் காத்து இருந்தனர். அவர்களில் பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்றனர். சிலருக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story