தாளவாடி அருகே ரோட்டை கடந்து சென்ற புலி காரில் சென்றபோது நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி


தாளவாடி அருகே ரோட்டை கடந்து சென்ற புலி காரில் சென்றபோது நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 July 2019 4:45 AM IST (Updated: 20 July 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே ரோட்டை கடந்து சென்ற புலியை காரில் சென்றவர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் தாளவாடி, ஜுர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து பயிரை சேதப்படுத்துகின்றன. மேலும் சில நேரங்களில் சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்துக்கொல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையிலும் வனவிலங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடியில் இருந்து தலமலை நோக்கி 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் தாளவாடியை அடுத்த நெய்தாளபுரம் அருகே சென்றபோது, திடீரென ஒரு புலி ரோட்டை கடந்தது. புலியை நேரில் பார்த்ததும் டிரைவர் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். காருக்குள் இருந்தபடியே புலியை அதிர்ச்சியுடன் 3 பேரும் பார்த்தனர். தங்களுடைய செல்போனிலும் புலியை படம் எடுத்தனர். சில வினாடிகளில் புலி ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றது.

இதுகுறித்து 3 பேரும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, ‘தாளவாடியில் இருந்து கோடிபுரம் செல்லும் சாலையில் 10–க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

இந்த மலைகிராமங்களுக்கு செல்லும் ரோட்டில் யானை, புலி போன்ற விலங்குகள் அடிக்கடி நடமாடி வருகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்றார்கள்.


Next Story