ஈரோடு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஊட்டச்சத்து குறைந்த மாணவ-மாணவிகளுக்காக “வாட்ட சாட்டம்” திட்டம்


ஈரோடு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஊட்டச்சத்து குறைந்த மாணவ-மாணவிகளுக்காக “வாட்ட சாட்டம்” திட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஊட்டச்சத்து குறைந்த மாணவ-மாணவிகளுக்காக “வாட்ட சாட்டம்” என்ற திட்டத்தை ஒளிரும் ஈரோடு அமைப்பு செயல்படுத்துகிறது.

ஈரோடு,

ஒளிரும் ஈரோடு அமைப்பு தொடங்கப்பட்டு 4½ ஆண்டுகளில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 34 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. 3 குளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மையம் இலவசமாக இயக்கப்படுகிறது. இப்படி பல்வேறு திட்டங்களை செய்து வரும் ஒளிரும் ஈரோடு அமைப்பு புதிதாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்காக “வாட்ட சாட்டம்”என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.

ஈரோட்டில் உள்ள அரசு (மாநகராட்சி, ஒன்றிய) பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளில் ஊட்டசத்து குறைந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு புரோட்டீன் நிறைந்த சத்து மாவு வழங்கும் இந்த திட்டத்தின் தொடக்கவிழா நேற்று ஈரோடு இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்தது. விழாவுக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி எம்.சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.சி.ராபின், சி.டி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி, ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த திட்டத்தின் முதன்மை புரவலராக ரூ.1 கோடியை வழங்கி உள்ள தொழில் அதிபரும், ஒளிரும் ஈரோடு அமைப்பின் நிறுவன அறங்காவலர்களில் ஒருவருமான கே.கே.எஸ்.கே.ரபீக் மாணவ-மாணவிகளுக்கு சத்து மாவு பாட்டில்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திட்டத்தின் நோக்கம் குறித்து ஒளிரும் ஈரோடு சுகாதாரத்திட்ட தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் பேசினார்.

இந்த திட்டம் குறித்து தலைவர் அக்னி எம்.சின்னசாமி, டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் ஆகியோர் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிகளுக்காக செல்லும்போது அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கவனித்தால், அதில் பலரும் பலவீனம் உடையவர்களாக தெரிந்தார்கள். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மாணவ-மாணவிகள் வயதுக்கு ஏற்ற உயரம், எடை இல்லாமல் இருந்தனர். இது இந்தியாவின் இளைய சமுதாயத்துக்கே சவாலான விஷயம். இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஈரோடு மாநகரில் உள்ள 11 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் 6 ஆயிரம் மாணவ-மாணவிகளை சோதனை செய்தோம். இதில் 12 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவுடன் காணப்பட்டனர். அவர்களுக்கு முதல் கட்டமாக அதிக புரோட்டீன் கொண்ட ஊட்டச்சத்து மாவு வழங்க முடிவு செய்தோம். மாதம் தோறும் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் உரிய உயரம், எடையுடன் வளரும் வரை ஊட்டச்சத்து மாவு வழங்கப்படும். கே.கே.எஸ்.கே.ரபீக் ரூ.1 கோடி நன்கொடை அளித்து உள்ளார். அத்துடன் ஒளிரும் ஈரோடு அமைப்பின் பங்கீடும் சேர்த்து இந்த திட்டம் தொடரும். ஒளிரும் ஈரோடு நிர்வாகிகள் பலரும் தங்கள் பங்குத்தொகையை கொடுத்து திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். எனவே அடுத்தகட்டமாக மலைவாழ் பகுதி மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்படும்’ என்றார்கள்.

விழாவில் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைபொறியாளர் இளங்கோவன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி ஏ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒளிரும் ஈரோடு அமைப்பு செயலாளர் சாரல் கணேசன் நன்றி கூறினார். கோபி கல்வி மாவட்ட அதிகாரியும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியருமான சிவக்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Next Story