பதவி கிடைக்காததால் ஆத்திரம்: ‘பனியன் நிறுவன மேலாளரை கத்தியால் குத்தி கொன்றேன்’ கைதானவர் போலீசில் திடுக்கிடும் தகவல்
பதவி கிடைக்காததால் ஆத்திரம் அடைந்து பனியன் நிறுவன மேலாளரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதானவர் போலீசில் தெரிவித்து உள்ளார்.
அவினாசி,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் அம்மாச்சி. இவருடைய மகன் கணபதி (வயது 30). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆட்டையாம்பாளையத்தில் மனைவி ஜெயமணி (27) மகள் சுபவர்ஷினி (3) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கணபதி தெக்கலூரை அடுத்த கந்தம்பாளையம் நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி காலையில் வேலைக்கு சென்ற கணபதி இரவு 9 மணி அளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. இதற்கிடையில் எம்.நாதம்பாளையம் நால்ரோடு அருகே சாலையோர முட்புதருக்குள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மார்பு, முதுகு, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பனியன் ஏற்றுமதி நிறுவன மேலாளர் கணபதி என்பது தெரியவந்தது.
இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து மேலாளர் கணபதியை கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? வேறு ஏதும் காரணமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில், தனபால் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். கணபதியுடன் பணியாற்றி வந்த மன்னார்குடியை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் ரபீன் (30) என்பவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ரபீனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கொலை செய்யப்பட்ட கணபதி மேலாளராக பணியாற்றி வந்த அதே பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பனியன் உற்பத்தி பொறுப்பாளராக ரபீன் வேலை செய்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்தில் உற்பத்தி மேலாளர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால் அந்த உற்பத்தி மேலாளர் பதவிக்கு ரபீன் முயற்சித்தார். ஆனால் மேலாளர் கணபதி, ரபீனுக்கு பதிலாக வேறு ஒருவரை அந்த பதவியில் அமர்த்தியதாக தெரிகிறது. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை தர மறுத்துவிட்டதால் கணபதி மீது ரபீன் கடும் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று மேலாளர் கணபதியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் ரபீன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார்.
இதையடுத்து 17–ந் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பி கொண்டிருந்த கணபதியை மோட்டார் சைக்கிளில் ரபீன் பின்தொடர்ந்து உள்ளார். எம்.நாதம்பாளையம் நால்ரோடு அருகே வந்த போது கணபதியின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கணபதி தடுமாறி கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய ரபீன் ஆவேசத்துடன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும், பின்னர் போலீஸ் தேடுதல் வேட்டையில் சிக்கி கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ரபீனை கைது செய்த போலீசார் அவரை அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.