தமிழகம் முழுவதும் முக்கிய பிரமுகர்களை கடத்தி, பணம் பறிக்க திட்டமிட்ட 5 பேர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை
தமிழகம் முழுவதும் முக்கிய பிரமுகர்களை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறி முதல் செய்யப்பட்டன.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் மேலாளர் முத்துக்குமார் கடந்த மாதம் 17-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக ரூ.14 லட்சத்தை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சை மெயின் ரோட்டில் காரில் வந்த ஒரு கொள்ளை கும்பல் முத்துக்குமாரை மறித்து கத்தி முனையில் ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடிவந்தனர். இந்த நிலையில் அதே கும்பல் கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்க 3 கார்களில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே போலீஸ் படை குவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் கொள்ளை கும்பல் வந்த ஒரு காரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 கார்களில் வந்தவர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி சென்று விட்டனர்.
தலைமறைவான கொள்ளை கும்பலை பிடிக்க தென்மண்டல ஐ.ஜி.வரதராஜன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் 50-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு இடங்களில் கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் பதிவான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தனிப்படை போலீசார் சென்னை, வாணியம்பாடி, முத்துப்பேட்டை, திருச்சி, மதுரை, ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளை கும்பலை சேர்ந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் இம்ரான்(வயது 36), சென்னை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த முகம்மது சலீம் மகன் சையது இப்ராகீம்(33), சென்னை அத்திப்பட்டு வாலாஜா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த துராப் மகன் பாஷா(25), சென்னை கரிமேடு திருவொற்றியூரை சேர்ந்த சுந்தரம் மகன் பாலாஜி(36), கும்பகோணம் மேலக்காவேரி செக்கடித்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் கண்ணன்(36) ஆகிய 5 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் கும்பகோணத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் இருந்து ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் இம்ரான் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும், சையது இப்ராகீம் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும், பாஷா, பாலாஜி, கண்ணன் மீது கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இவர்கள் அனைவரும் கும்பகோணத்தில் தொழிதிபர் ஒருவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு முன்பே இவர்கள் போலீஸ் பிடியில் சிக்கி விட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story