எடியூரப்பா முதல்-மந்திரி ஆக வேண்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பா.ஜனதா பெண் எம்.பி. சிறப்பு வழிபாடு
எடியூரப்பா முதல்-மந்திரி ஆக வேண்டி பா.ஜனதா எம்.பி. ஷோபா சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மைசூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு மீதான அதிருப்தியில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதை பயன்படுத்தி பா.ஜனதா கர்நாடகத்தில் ஆட்சியை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரி ஆக வேண்டி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி எம்.பி.யுமான ஷோபா கன்னட ஆடி (ஆஷாட) மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று மைசூரு அருகே சாமுண்டி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். முன்னதாக அவர் மலைஅடிவாரத்தில் இருந்து 1,001 படிக்கட்டுகளை நடந்து மலைக்கு வந்து அம்மனுக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
செயல்படாத அரசு
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மக்கள் விரோத அரசு ஆட்சி நடக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக கர்நாடக அரசு செயல்படாமல் உள்ளது. வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அரசு வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவில்லை. மேலும் வறட்சி நிவாரண பணிகளை செய்யவில்லை. எடியூரப்பா விரைவில் முதல்-மந்திரி ஆக பதவி ஏற்பார்.
குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என கூறினார். ஆனால் தற்போது அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் தள்ளாடுகிறது. இந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் கவர்னர் உத்தரவிட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும்
சபாநாயகர் ரமேஷ்குமார் காங்கிரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார். எனவே அவர் சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. அதே வேளையில் நாங்கள் 3-ம் வகுப்பு மாணவர்கள் அல்ல. கூட்டணி கட்சியினர் அவர்களது நிலைப்பாட்டை தெளிவாக விளக்க வேண்டும். இந்த அரசுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story