மதுரை விமான நிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு


மதுரை விமான நிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 20 July 2019 4:45 AM IST (Updated: 20 July 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை,

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. எனக்கு சொந்தமான நிலம் விமான நிலையத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு மதுரை கலெக்டர் நில உரிமையாளர்களை நேரில் அழைத்திருந்தார்.

அப்போது நிலங்களுக்கான ஆவணங்கள் மற்றும் அப்போதைய சந்தை மதிப்பு சான்றுகளை தாக்கல் செய்தோம். ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.4 லட்சம் நிர்ணயிக்க வலியுறுத்தினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.

இடைக்கால இழப்பீடு பெற உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தனர். அதன்படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்தோம். இதையடுத்து எனக்கு சொந்தமான 2 ஆயிரத்து 437 சதுர அடி நிலத்திற்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 301-ஐ மட்டும் இழப்பீடாக வழங்கினர்.

இந்த தொகை சந்தை மதிப்பை காட்டிலும் மிக குறைவானது. தொழிற்சாலை வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்துதல், சட்டத்திற்கு எதிரானது. தற்போதைய சந்தை மதிப்பின்படி ஒரு சதுர அடி நிலத்திற்கு 481 ரூபாய் வழங்க வேண்டும். அதன்படி கணக்கிட்டால் சுமார் ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும். எனவே தமிழ்நாடு தொழிற்சாலை வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி, என்னிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Next Story