சுவாமிமலை அருகே, மாமனாரை செங்கலால் அடித்துக்கொன்ற பெண்ணுக்கு வலைவீச்சு - உறவினர் கைது


சுவாமிமலை அருகே, மாமனாரை செங்கலால் அடித்துக்கொன்ற பெண்ணுக்கு வலைவீச்சு - உறவினர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே மாமனாரை, செங்கலால் அடித்துக்கொன்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 65).விவசாயி. இவருடைய மகன் சரவணன்(35). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மணஞ்சேரி கிராமத்தை சேர்ந்த காசிலிங்கம் மகள் தமிழ் அழகி(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சரவணன் கூலி வேலை செய்து வந்ததால் வாடகை வீட்டில் குடியிருந்து குடும்பம் நடத்த பணமின்றி அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் தனது சொந்த ஊரான தேவனாஞ்சேரி கிராமத்துக்கு வந்து அங்கு தனது தந்தைக்கு சொந்தமான காலி மனையில் வீடு கட்டி குடியேற முடிவு செய்தார்.

இதன்படி சம்பவத்தன்று தனது மாமனாருக்கு சொந்தமான காலி இடத்தை சரவணன் மனைவி தமிழ் அழகி மற்றும் அவரது அண்ணன் மகேஷ் ஆகியோர் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன், ‘யாரை கேட்டு இந்த இடத்தை சுத்தம் செய்கிறீர்கள்’ என கேட்டார். இதனால் ராமச்சந்திரனுக்கும் அவரது மருமகள் தமிழ் அழகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்அழகி அருகில் கிடந்த செங்கலை எடுத்து தனது மாமனார் ராமச்சந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்அழகியின் அண்ணன் மகேஷ் உருட்டுக்கட்டையால் ராமச்சந்திரனை தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் அழகியின் அண்ணன் மகேசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழ் அழகியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் மாமனாரை பெண் ஒருவர் செங்கலால் தாக்கி கொன்ற சம்பவம் சுவாமிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story