திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்


திண்டிவனம் அருகே அதிர்ச்சி சம்பவம், அக்காள், தங்கையை 6 மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரம்
x
தினத்தந்தி 20 July 2019 6:00 AM IST (Updated: 20 July 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே அக்காள், தங்கையை கட ந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமிகளின் சித்தப்பா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தாத்தா உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை பிரிந்து, தனது 9 மற்றும் 7 வயது மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த சமயத்தில் தனது 2 மகள்களையும் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டில் அந்த பெண் விட்டு சென்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு வந்து 2 மகள்களையும் தன்னுடன் அழைத்து சென்று, புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சேர்த்தார். ஒரு மகள் 4-ம் வகுப்பும், மற்றொரு மகள் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற 9 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தாள். அவரது தங்கையும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அந்த சிறுமிகள் இருவரையும் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் சிறுமிகள் இருவரும் பாலியல் தொந்தரவு செய்ய ப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்ததில், 2 குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, மனதை பதறவைக்கும் தகவல்களை கூறி கதறி அழுதனர். இதனை கேட்ட அவர்களது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

உடனே இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நலக்குழு தலைவர் ராஜேந்திரன் நேரில் சென்று அந்த சிறுமிகளிடம் விசாரித்தார். அப்போது சிறுமிகள் திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் இருந்த போது உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பாலியல் கொடுமை செய்ததாக தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதனர். சம்பவம் நடைபெற்ற பகுதி விழுப்புரம் மாவட்டம் என்பதால் அங்குள்ள குழந்தைகள் நலக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் பரிந்துரைத்தார். அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சசிகுமார், உறுப்பினர் லூர்துசேவியர், குழந்தைகள் நல பாதுகாப்பு திட்ட அலுவலர் கஜலட்சுமி, திண்டிவனம் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் பிரம்மதேசம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பாட்டி வீட்டில் 2 குழந்தைகளும் இருந்த போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்கள் சிலர் முதலில் விளையாட்டு காட்டுவது போல் ஆபாசமான வார்த்தைகளை பேசி, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையறிந்த மற்றவர்களும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் வேதனை தாங்காத அந்த சிறுமிகள் தங்களை விட்டுவிடுமாறு கதறி அழுதும் கேட்டுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் 6 மாதங்களுக்கு மேலாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமிகளின் சித்தப்பாக்கள் ரமேஷ்(வயது 30), மகேஷ்(30), உறவினர்கள் ரவிக்குமார்(23), அருண் குமார்(24), அஜித்குமார்(22), பிரபாகரன்(23), தீனதயாளன்(24), பிரசாந்த்(20) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சிறுமிகளின் தாத்தா துரை(50) மற்றும் உறவினர் மோகன்(25) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். மேலும் சிறுமிகள் 2 பேருக்கும் தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story