தாழ்த்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவியை விரைவாக வழங்க வேண்டும்


தாழ்த்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவியை விரைவாக வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 21 July 2019 4:45 AM IST (Updated: 20 July 2019 8:50 PM IST)
t-max-icont-min-icon

தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைதலைவர் முருகன் அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு துறைகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலை, குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், துப்புரவு தொழிலாளர்களின் நிலை ஆகியவை குறித்து அவர் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். கூட்டத்தில் ரூ.55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. முடிந்த வழக்குகளில் நிவாரணம், வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை 3 மாதத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலணி, லைப்ஜாக்கெட் வழங்கவும், அவற்றை பயன்படுத்தியே அவர்கள் பணியை மேற்கொள்வதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கல்விக்கடன், தொழில் கடனுதவி ஆகியவற்றை விரைவாக வழங்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் வாரியாக பொது இடஒதுக்கீடு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஏழை மாணவ-மாணவிகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். துப்புரவு பணியாளர்களுக்கு பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது தர்மபுரி மாவட்டத்தில் ஊதியம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதை பரிசீலனை செய்து பிற மாவட்டங்களில் வழங்கப்படுவதை போல் ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குழந்தை திருமணங்களால் கல்வி கற்றல் தடைபட்ட தாழ்த்தப்பட்ட மாணவிகள் தொடர்ந்து படிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் தகுதியுடைய நபர்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், உதவி கலெக்டர்கள் சிவன்அருள், புண்ணியகோட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அஜய் சீனிவாசன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் அசோகன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், தர்மபுரி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உள்பட அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story