வாணாபுரம் அருகே இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி


வாணாபுரம் அருகே இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 5:12 PM GMT)

வாணாபுரம் அருகே இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள வேலையாம்பாக்கத்தில் பள்ளிக்கூட தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு, கிழக்கு தெரு, கோவில் வீதி உள்ளிட்ட பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்றில் உள்ள மின் மோட்டார்கள் பழுதானதால் குடிநீர் சரிவர வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மினி டேங்கில் இருந்து தண்ணீரை இப்பகுதியை சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த மினி டேங்கை சரியாக பராமரிக்காததாலும், மூடியில்லாததாலும் அந்த பகுதியில் சுற்றித்திரியும் பறவைகள் அங்கு தண்ணீரை தேடி வருகிறது. தண்ணீர் குடிக்கும் பறவைகள் மினி டேங்கில் விழுந்து உயிர் இழந்து விடுகிறது. இதனை கவனிக்காமல் குழாய் மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துள்ளனர்.

அப்போது இறந்த பறவை கழிவுகளுடன் தண்ணீர் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தும் நிலை இருந்தும் அதில் பறவைகளின் இறைச்சி கலந்த தண்ணீர் வருவதால் அப்பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, குடிநீர் தொட்டிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story