கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊடக மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு


கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊடக மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2019 4:00 AM IST (Updated: 20 July 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுமதிகளை பெற்று விளம்பரம் செய்திட ஊடக சான்றிதழ் மற்றும் ஊடக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி மற்றும் செய்தி சேனல்களை கண்காணிக்க 24 மணி நேரமும் ஊடக மையம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இதனை தேர்தல் பொது பார்வையாளர் சுதம்காதேபந்தரிநாத், தேர்தல் காவல் பார்வையாளர் ஆதித்யாகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

அப்போது, ஊடக மையத்தில் 5 தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு, காட்சி ஊடகங்களின் வாயிலாக வாக்கு சேகரிக்க செய்யப்படும் விளம்பரங்களை கண்காணித்து செலவினங்களை கணக்கிட்டு வேட்பாளர்களின் செலவினக்கணக்கில் சேர்த்திட இக்கண்காணிப்பு குழு 24 மணி நேரமும் 3 குழுக்களாக பணியாற்றி வருகிறது.

அனுமதி பெறாமல் மேற்கண்ட ஊடகங்களில் வாயிலாக வேட்பாளர்கள் விளம்பரம் செய்தால் அவற்றை கண்காணித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை வேட்பாளர்களிடம் இருந்து விளம்பரங்கள் வெளியிட விண்ணப்பங்கள் வரப்பெறவில்லை. மேலும் அனுமதி பெறாமல் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் விளம்பரங்கள் வெளியிடவும் இல்லை என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், தேர்தல் பார்வையாளர்களிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக வேலூர் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர். அப்போது வரபெற்ற புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாட்சாயினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Next Story