திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் கல்லூரிகளில் போலீஸ் பெயரில் ஒரு குழு அமைக்க வேண்டும் டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுரை


திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் கல்லூரிகளில் போலீஸ் பெயரில் ஒரு குழு அமைக்க வேண்டும் டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுரை
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் கல்லூரிகளில் போலீஸ் பெயரில் ஒரு குழு அமைக்க வேண்டும் என டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.

சமயபுரம்,

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கான கருத்தரங்கு சமயபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு சென்றதாக 40 சிறுவர்கள் மாயமான வழக்குகளும், 154 சிறுமிகள் மாயமான வழக்குகளும், 119 இளம்பெண்கள் மாயமான வழக்குகளும், 8 வாலிபர்கள் மாயமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலானோர் 18 வயதிற்குட்பட்டவர்களாக தான் உள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போஸ்கோ சட்டம், தகவல் தொழில்நுட்பம் சட்டம், குழந்தை திருமணம் தடுத்தல், ராகிங், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை, மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களிடையே தற்கொலையை தடுக்கவும், இளஞ்சிறார்கள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை பற்றி தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இது போன்ற பிரச்சினைகளை போலீஸ் துறையினருடன் சேர்ந்து தீர்வு காண ஒவ்வொரு கல்லூரியிலும் போலீஸ் பெயரில் ஒரு குழு அமைக்க வேண்டும்.

இருபாலர் படிக்கும் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் மட்டும் படிக்கும் கல்லூரியில் மாணவர்கள் பெயரிலும், மாணவிகள் மட்டும் படிக்கும் கல்லூரியில் மாணவிகள் பெயரிலும் ஒரு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் உள்ளவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளை கண்டறிந்து போலீஸ் துறையுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜியாவுல் ஹக் (திருச்சி), சீனிவாசன் (அரியலூர்) மற்றும் போலீஸ் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கல்லூரி முதல்வர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

Next Story