திண்டிவனத்தில் பயங்கரம் கத்தரிக்கோலால் குத்தி மாமியார் கொலை


திண்டிவனத்தில் பயங்கரம் கத்தரிக்கோலால் குத்தி மாமியார் கொலை
x
தினத்தந்தி 21 July 2019 5:00 AM IST (Updated: 21 July 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் சொத்தில் பங்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த மருமகன், தனது மாமியாரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார்.

திண்டிவனம், 

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேட்டை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவருடைய மனைவி பானுமதி(வயது 54). இவர்களுக்கு சாந்தி(34) என்ற மகளும், பாலாஜி(28) என்ற மகனும் உள்ளனர். பாலாஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சந்தைமேட்டில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார்.

பானுமதி தனது மகள் சாந்தியை உறவினரான புதுச்சேரி தேங்காய் திட்டை சேர்ந்த நந்தகோபால் மகன் முருகானந்தம்(42) என்பவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் மட்டுமே இருவரும் புதுச்சேரியில் இருந்தனர். அதன்பிறகு இருவரும் பானுமதி வீட்டில் தங்கி இருந்தனர். முருகானந்தம்-சாந்தி தம்பதிக்கு பாவனா(12) என்ற மகளும், கிஷோர்(8) என்ற மகனும் உள்ளனர். முருகானந்தம், சந்தைமேட்டில் கோழிகறி கடையும், பக்கோடா கடையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் முருகானந்தம் தனது மனைவி சாந்தி மற்றும் மாமியார் பானுமதியிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்து வந்தார். இதனால் தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு முருகானந்தம், தனது மனைவி சாந்தியிடம் தகராறு செய்தார்.உடனே அங்கிருந்த பாலாஜி, சொத்துக்காக ஏன்? அடிக்கடி சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம், மைத்துனர் பாலாஜியை கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தினார். இதில் காயம் அடைந்த அவர், வலிதாங்க முடியாமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பானுமதி எழுந்து ஓடிவந்து தடுக்க முயன்றார்.

இதனால் முருகானந்தம் ஆத்திரம் அடைந்து மாமியார் உயிருடன் இருந்தால் தனக்கு சொத்து கிடைக்காது என கருதி, அவரையும் கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பானுமதி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை அறிந்ததும் முருகானந்தம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ரோ‌‌ஷணை போலீசார் விரைந்து சென்று பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பாலாஜியை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரோ‌‌ஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த முருகானந் தத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story