பட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; பயிற்சி முகாமில் விவசாயிகள் வலியுறுத்தல்


பட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; பயிற்சி முகாமில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 July 2019 4:15 AM IST (Updated: 21 July 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

பட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குடிமராமத்து திட்ட செயலாக்கம் குறித்த பயிற்சி முகாமில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், குடிமராமத்து திட்ட செயலாக்கம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக விவசாயிகள் பங்களிப்புடன் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், குளங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த பணிகள் அனைத்தும் விவசாய சங்கங்கள், நீர் பாசன சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படும். அத்துடன் குடிமராமத்து பணிகளுக்கான தொகையில் 10 சதவீதத்தை விவசாயிகளோ, நீர் பாசன சங்கங்களோ வழங்க வேண்டும். பணம் இல்லையென்றால் உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ வழங்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.34 கோடியே 36 லட்சத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து கலெக்டரிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது பழனியை அடுத்த எரமநாயக்கன்பட்டி பட்டிக்குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் அந்த குளத்துக்கான நீர்வழிப்பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனை அகற்ற வேண்டும். அதேபோல் சித்திரைகுளத்தில் குடிமராமத்து பணிக்கான அளவீட்டு பணிகள் கூட இன்னும் நடைபெறவில்லை.

பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்வழிப்பாதைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. அதனை தூர் வாரினால் தான் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அத்துடன் இடது பிரதான கால்வாயில் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. அதனை தடுக்க வேண்டும். விவசாயிகள், நீர்பாசன சங்க நிர்வாகிகள் ஜி.எஸ்.டி. நம்பர் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. அதற்கான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும் என்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து குடிமராமத்து பணிகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story