கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல் சீற்றம் படகு போக்குவரத்து தாமதம்


கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல் சீற்றம் படகு போக்குவரத்து தாமதம்
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல் சீற்றம் நீடித்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் சின்னமுட்டம், குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரியில் நேற்று 3-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடலில் ராட்சத அலைகள் கடற்கரையை நோக்கி சீறி பாய்ந்தபடி இருந்தது. மேலும் பாறைகளில் மோதி சிதறியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடல் சீற்றமாக இருந்ததால் அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 3-வது நாளாக விசைப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. காலையில் வெகுநேரமாக கடலில் பயணம் செய்யும் ஆர்வத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதால் 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. 

Next Story