50 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வற்றாமல் இருந்த மணமேல்குடி மஞ்சள்குளம் வறண்டது


50 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வற்றாமல் இருந்த மணமேல்குடி மஞ்சள்குளம் வறண்டது
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

50 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வற்றாமல் இருந்த மணமேல்குடி மஞ்சள்குளம் நீரின்றி வறண்டது.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியின் மைய பகுதியில் அமைந்துள்ளது மஞ்சள் குளம். பெரியகுளமான மஞ்சள்குளம் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதரமாக உள்ளது. தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது.

இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.

வறட்சி பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்களும், ஏரிகளும் வறண்டு காணப்படுகின்றன. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக சிறிய அளவில் தண்ணீரும், சேரும், சகதியுமாக உள்ளது. இருப்பினும் போதிய மழை பெய்யாததாலும் விவசாய நிலங்களும் வறண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கால்நடைகளும் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. மணமேல்குடி நகரின் மையப்பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் காணப்படும் மஞ்சள்குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வற்றாமல் இருந்து வந்தது.

இது மணமேல்குடி நகருக்கு அடையாளச்சின்னமாகவும், பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் நீர் ஆதாரமாகவும் விளங்கியது. இந்தக் குளத்தில் எப்போதும் தண்ணீர் முழு கொள்ளளவுடன் இருக்கும். அளவுக்கு அதிகமான மழை பெய்யும் போது இந்த மஞ்சள்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் தண்ணீர் திறக்கப்பட்டு அருணாச்சலகாவிரி வழியாக கடலில் கலக்க வடிகால் வசதி உள்ளது. இந்தக் குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் விடுவதற்கு வாய்க்கால் வசதியும் உள்ளது.

இந்த குளத்தின் நான்குபுறமும் மக்கள் குளிப்பதற்கும், பிற தேவைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கும் வழித்தடம் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு இந்த குளம் சிறந்த நீர் ஆதாரமாகவும் விளங்கியது. இந்த குளத்தில் குளிப்பதற்காக பல கிராமங்களில் இருந்தும், வெகு தொலைவில் இருந்தும் மக்கள் வந்தனர்.

ஆனால் கடந்த 4 வருடங்களாக பருவமழை பொய்த்ததால் இந்தக் குளம் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்தக் குளத்தின் மையப்பகுதியில் உள்ள தூண் பகுதி முழுமையாக வெளியே தெரிகிறது. இந்த மஞ்சள்குளம் வறண்டது. மணமேல்குடி மக்களை கவலையடையச் செய்து உள்ளது. இந்தக் குளத்தின் வழியாக நடந்து செல்லும் பெரியவர்களும், முதியவர்களும் என் வாழ்நாளில் மஞ்சள்குளம் வற்றியதை பார்த்ததே இல்லை என்று கூறி செல்வதை காணமுடிகிறது.

Next Story