சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு மேலும் ஒரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை


சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு மேலும் ஒரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 July 2019 3:45 AM IST (Updated: 21 July 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த கீரப்பாளையம் அருகே உள்ள பாராது கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் தற்போது சொந்தமாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணியில் புவனகிரி அருகே உள்ள அழிச்சுவடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் கட்டுமான பணி நடந்து. அப்போது, அழிச்சுவடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக் செல்வம்(வயது 30), தர்மலிங்கம் மகன் மணிவேல்(35) ஆகியோர் கான்கிரீட்டுக்காக கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எந்திரம் மூலம் இரும்பு கம்பிகளை வெட்டியுள்ளனர். இந்த நிலையில் அதற்கு வந்த மின்சாரம் எதிர்பாரத விதமாக இருவர் மீதும் பாய்ந்தது. இதில் கார்த்திக்செல்வம், மணிவேல் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த கார்த்திக்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிய மணிவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கார்த்திக்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story