சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர்,
தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரியினை தூர்வாருவதற்கு உத்தரவிட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.கடலூர் மாவட்டத்தில் 36 ஏரிகளில் குடிமராமத்து பணிகளும், 792 ஏரிகளில் வண்டல் மண் எடுக்கும் பணிகளும், நிலத்தடி நீரை உயர்த்திட வீடுகள், அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகளும், ஆற்று நீர் கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி ரூ.30 லட்சம் செலவில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் சந்திரன் கிளை வாய்க்கால்களை தூர்வாரும் பணியும், ரூ.9 லட்சம் செலவில் சிதம்பரம் தாலுகா தில்லைநாயகபுரம் மற்றும் அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள செவுட்டு வாய்க்கால் மற்றும் வீரசோழகன் வடிகால் தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சந்திரன் கிளை வாய்க்காலில் தற்போது தூர்வாரப்பட்டுள்ள இடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டு, அந்த பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.
இதில் வீரசோழகன் வடிகாலை பொறுத்தவரை துணிசிரமேடு கிராமத்தில் தொடங்கி மண்டபம் கிராமத்தில் சென்று முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 2,900 மீட்டர் ஆகும். இதன் மூலம் சி.தாண்டேஸ்வரநல்லூர், துணிசிரமேடு, சி.வீரசோழகன் மற்றும் து.மண்டபம் ஆகிய கிராமங்களின் பாசன வடிகாலாக பயன் பெறுகின்றன. செவுட்டு வாய்க்கால் மற்றும் வீரசோழகன் வடிகாலில் மண்மேடுகள், செடி கொடிகள் அகற்றுதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, புவனகிரி தாசில்தார் சத்தியன், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story