பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வாலிபர்; கமுதி அருகே பரிதாபம்
கமுதி அருகே பழுதை சரி செய்வதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கமுதி,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 35). இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த முத்துமீனாள் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, தற்போது 1½ வயதில் குழந்தை உள்ளது.
காளிமுத்து தனது மனைவியின் ஊரில் தங்கி, தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டு இணைப்புக்கான மின்ஒயரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்வதற்காக பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் ஒன்றில் காளிமுத்து ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் மின்கம்பத்திலேயே பலியானார். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனித்து, கமுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மின்கம்பத்தில் இருந்து, காளிமுத்துவின் உடல் இறக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கமுதி பகுதியில் மின் பழுதுகளை சீரமைப்பதற்கு போதிய மின்வாரிய பணியாளர்கள் இல்லாததால் அந்தந்த கிராமத்தில் உள்ள சிலர் இதுபோன்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கவும், போதிய பணியாளர்களை நியமிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.