விவசாய சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை


விவசாய சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 21 July 2019 4:45 AM IST (Updated: 21 July 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

விவசாய சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி பாசனக்கண்மாய் மராமத்து பணி செய்வதில் விவசாய சங்கங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் மராமத்து பணி செய்ய அரசு அனுமதி வழங்கும் என்று விவசாயசங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு இளையான்குடி கண்மாய் மராமத்து பணிக்கு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் இதுவரையிலும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. இந்தநிலையில் ஒப்பந்ததாரர்கள் வசம் மராமத்து பணி செய்ய அரசு அனுமதியளித்துள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து நீர்பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் இளையான்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தாசில்தார் பாலகுரு, போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட சமாதானக்கூட்டம் நடந்தது. அதில் வருகிற 25-ந் தேதி விவசாயசங்க பிரதிநிதிகள் மூலம் தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இளையான்குடி கண்மாயை தூர்வாரும் மராமத்துப்பணி செய்யும் உரிமை வழங்கப்படும் என்று முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

Next Story