குடிமராமத்து திட்டத்தில் கண்மாய்களை சீரமைக்கும் பணி; கலெக்டர் ஆய்வு


குடிமராமத்து திட்டத்தில் கண்மாய்களை சீரமைக்கும் பணி; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2019 4:15 AM IST (Updated: 21 July 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை சீரமைக்கும் பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதில் சிவகங்கையை அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் உள்ள பெரியகண்மாய், காளையார்கோவில் அருகே செம்பனூர் ஊராட்சியில் உள்ள பெரியகண்மாய், இளையான்குடி பகுதியில் நீர்நிலை வரத்துக்கால்வாய்கள் தூர்வாருதல், கண்மாய்கள் சீரமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 109 கண்மாய்கள் சீரமைப்பு பணிக்கு பொதுப் பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டு இதற்காக ரூ.39.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியானது 6 கோட்டங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

அதில் சருகனியாறு பாசனக்கண்மாய் 30, மணிமுத்தாறு பாசனக்கண்மாய் 43, கீழ் வைகை பாசனக்கண்மாய் 3, முன்ஜமீன் கண்மாய்கள் 16, பெரியார் பாசனக் கண்மாய்கள் 16, குண்டாறு பாசனக்கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் 20 ஜே.சி.பி. எந்திரங்கள் வாங்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 520-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இதனால் இந்த பகுதியில் சிறிது மழை பெய்தால் கூட முழு அளவு தண்ணீரும் குளங்களில் தேங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கான சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆய்வின் போது சருகனியாறு கோட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராமன், மணிமுத்தாறு கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், முன்னாள் ஜமீன் கண்மாய் செயற்பொறியாளர் செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story