மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக கிடைக்காத நிலை; மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக கிடைக்காத நிலை; மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 8:01 PM GMT)

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக கிடைக்காததால் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 277 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், 406 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 751 யூனியன் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 16 ஆதி திராவிட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 29 நகராட்சி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் பள்ளி திறக்கும் போதே வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தாமதமாகவே வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 17,625 முதல் வகுப்பு மாணவர்களுக்கும், 17,670 இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 18,100 மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், 18,565 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கும், 19,240 ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 28,240 ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும், 26,650 ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், 25,800 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 27,200 ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், 27,500 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 22,400 பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கும், 22,200 பிளஸ்-2 மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. எனவே இந்த வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய பாடத்தின்படியான பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. சுயநிதி பிரிவு வகுப்புகளில் படிக் கும் மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைக்காத நிலை உள்ளது. தனியார் புத்தக விற்பனை நிலையங்களிலும் புதிய பாடத்திட்டத்தின்படியான புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கவில்லை.

பாடப்புத்தகங்கள் கிடைக் காத மாணவ, மாணவிகள் தேர்வு நெருங்கி வரும் நிலையில் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இது பற்றி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், தேவைப்படும் புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

ஆனால் பிற வகுப்புகளிலும் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் தனியார் நிறுவனங்கள் தயாரித்துள்ள துணை நூல்களை நம்பி படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துணை நூல்களின் விலை கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கிராமப்புற மாணவர்கள் துணை நூல்களை வாங்க முடியாத நிலையும் உள்ளது. ஒரு சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்களை சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு வழங்கி விட்டதால் உதவி பெறும் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் முழுமையாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதற்கு தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story